Pages

Saturday, July 30, 2011

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!


எல்லாருக்கும் போய் சேரவேண்டும் என்பதால் இந்த பதிவு இங்கே பதிவிடப்படுகிறது..இது "சிந்திக்கவும்" என்ற இணையதளத்தில் வெளியானது.

"செய்திகள் அனைத்தும் மக்களுக்கே! காப்பி செய்து பயன்படுத்தலாம். அனுமதி பெற தேவையில்லை"


என்று அவர்களது  தளத்திலேயே அறிவித்து  இருப்பதால் அனுமதி பெறவில்லை...


இனி பதிவு..




  JULY 21, விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி, மற்றும் பொழுதுபோக்கு ஊடகம். எந்த ஊடகமும் பொருளாதார இலாபத்தை மையமாக வைத்துத்தான் ஆரம்பம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் அந்த பிராந்தியத்தின் மொழி, தேசம், இனம் சார்ந்த பண்புகளை கட்டிக்காக்கக்கூடிய பொறுப்புணர்வும், பகுத்தறிவும் கலந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாய் வந்திருக்கிறாள். அவளும், ரஜினியை கடவுள் என்கிறாள்,  ரஜினி நலம் பெற மொட்டைகள் அடித்துக்கொண்டு சில புத்திசாலிகள் இப்படி ஆரம்பிக்கிறது நிகழ்ச்சி.  என்ன நடக்கிறது இங்கே? யாரை வேண்டுமானாலும் கடவுளாக்கி விடும் அளவுக்கு இவ்வளவு அறிவு வறட்சி எப்படி வந்தது எம் தமிழ் இனத்துக்கு? 

கோபிநாத் கேள்வி கேட்கும் தொனியிலே அறிவுடைய மக்களுக்கு புரியும் இந்த மக்கள் எவ்வளவு புத்தி மழுங்கி விட்டார்கள் என்பது. கோபிநாத், "ஒரே மனிதரை, எத்தனை வகையில் மக்கள் மதிக்கிறார்கள்? ஒருவர் என் கடவுள் என்கிறார் ஒருவர் மனிதக்கடவுள் என்கிறார் ....., ஒருவர் என் ஆத்மா என்கிறார்...., ஒருவர் என் உயிர் என்கிறார்....., ஒருவர் என் வாழ்வு என்கிறார்...., நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன் என்று ஒருவர்.... அடேங்கப்பா" என்று கோபிநாத் சொல்லும்பொழுது அவரால் வெளிப்படுத்த முடியாத ஒரு அங்கலாய்ப்பும் இவ்வளவு அறிவு கெட்டு விட்டார்களே என்ற விசனமும் உள்ளூரதெரிகிறது.

இதுபோன்ற காட்சிகளும், தொடர்களும் ஒரு பக்குவமற்ற, கடைநிலை பார்வையாளர்களை, சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ரஜினியை "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பம் செய்து வைத்த ஸ்ரீ நிவாஸ் என்ற பாடகர் இதே போன்ற நிகழ்ச்சியை விஜய் TV ரஜினி போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கேரளாவில் நடத்தி இருந்து அவரிடம் இதே கேள்வியை கேட்டிருந்தால், "ரஜினி ஒரு கடவுள் என்று சொல்லி இருப்பாரா? அப்படி சொல்லி இருந்தால் ஸ்ரீ நிவாசை நிம்மதியாக தூங்க விட்டிருப்பார்களா கேரள மக்கள்?  ஸ்ரீ நிவாசுக்குத் தெரியும் தமிழகம் வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வாழ்வோர் வாந்தி எடுத்தாலும் அது நல்ல உணவு என்று ஏற்றுக் கொள்ளும் என்று.

இந்த பாட்டு போட்டி சுற்றுகளில் ஆன்மீகச்சுற்று என்று ஒன்று வைத்தார்கள். அதில் அனைத்தும் இந்துமத ஆன்மீக பாடல்களே போட்டியாளர்களால் பாடப்பட்டது. இந்த ஆன்மீக சுற்று போட்டியாக நடத்தப்படாமல் ஒரு ஷோவாகவே நடத்தப்பட்டது. அந்த சுற்றுக்கு மதிப்பெண்களும் இல்லை வெளியேற்றமும் இல்லை. அப்படி இருக்கையில் அதில் குறைந்த பட்சம் ஒரு இஸ்லாமிய பாடல் மற்றும் ஒரு கிருஸ்தவ பாடலையாவது பாடச்சொல்லி ஒளிபரப்பி இருக்கலாம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதத்தினராலும் பார்க்கப்படுகிற ஒரு பொது ஜன ஊடகத்தில் இப்படி ஒரு மத சார்ப்பு, அதே நேரம் மனிதனை கடவுள் என்று சொல்ல வைப்பது, தற்கொலையை ஊக்கப்படுத்துவது போல் உள்ள பேச்சுகளை சென்சார் இல்லாமல் அப்படியே வெளியிடுவது போன்றவை விஜய் டிவிக்கு அழகல்ல.

அதுபோல் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் இந்த விஞ்சான யுகத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை அவர்களுக்கு அதிசய சக்தி இருக்கிறது என்பது போல் காட்டுவது, ஒரு கோவிலில் காய்ந்த மிளகாயை போட்டு ஒரு யாகம் நடத்தப்படுகிறது அதற்க்கு சக்தி இருக்கிறது என்று கோபிநாத் புலம்புவது, இப்படி நடந்தது என்ன என்று உண்மை சம்பவத்தை காட்டாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கோபிநாத் தன் பேச்சாற்றல் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மேலும் மூட பழக்க வழக்கத்தில் மூழ்க செய்வதற்கே உதவும் என்பதை விஜய் டிவி புரிந்து கொள்ளுமா? நீயா நானா போன்ற நல்ல நிகழ்சிகளை அளிக்கும் விஜய் டிவி இதுபோல் உள்ள குறைகளை கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

                                                                                                               நன்றி "சிந்திக்கவும்"

5 comments :

நாய் நக்ஸ் said...

சாட்டை அடி

சக்தி கல்வி மையம் said...

சவுக்கடி பதிவு..

பாலா said...

நண்பரே இந்த நிகழ்ச்சியில் இசுலாமிய பாடல் பாடாததுதான் உங்கள் கோபமா. நீங்கள் இதற்கு முந்தைய சீசன்களை பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. அதில் ஒரு ஹிந்து, முஸ்லீம் வேடம் அணிந்தபடி, ஒரு இசுலாமிய பாடலை பாடினார். இதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே இதை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் பார்க்கும் நோக்கத்தை பொறுத்தது. அந்த பாடகர்களின் குரலையும், திறமையையும் மட்டுமே பார்த்தால் குறை தெரியாது.

கடைசி பத்தியில் சொல்லி இருப்பது முற்றிலும் ஏற்புடையது. இது விஜய்டிவி அல்ல எல்லா டிவிக்களிலும் நடக்கிறது.

அப்புறம் முதல் பாரா... கொஞ்ச நாள் பொருத்துக்கங்க, ரஜினி செத்து விடுவார். அப்புறம் எல்லாம் சரியாகி விடும். மிஞ்சி மிஞ்சி போனால் இன்னும் ஒரு தலைமுறை.

ஜெ. ராம்கி said...

ரிமோட் லேது...அதுல பட்டன் கீது...ஐயோ பாவம்.. ஏன் இப்படி சட்டையை கிழிச்சிக்குறீங்க

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள் திரு NAAI-NAAKS, திரு வேடந்தாங்கல் கருன், திரு பாலா, திரு J.Ramki அனைவருக்கும் நன்றி..
திரு பாலா அவர்களுக்கு, "இந்த கட்டுரை சிந்திக்கவும் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இஸ்லாமியபாடல்கள் பாடாதது பற்றிய கருத்தும் அவர்களுடையதுதான்.
இசை கூட இஸ்லாம் மார்கத்தில் அனுமதிக்கப்பட்டது இல்லை...அதனால் இஸ்லாமிய பாடல்கள் பாடினாலும் அதுவும் தவறுதான்..கண்டனத்திற்குரியதுதான் .மேலும், இது ஒரு சினிமா நடிகனை கடவுள் தன்மைக்கு கொண்டு செல்லும் அவலத்தை கண்டித்ததற்காக மறுபதிப்பு செய்தேன்.
இன்னும் ரஜினி சாகவேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல நாங்கள் நினைக்கவில்லை..அதற்கும் முன்பு நாம்கூட இருப்போமா எனபது கூட உறுதியற்ற நிலையைத்தான் நாம் நம்பவேண்டும். மரணம் எனபது எல்லோரும் சந்திக்கவேண்டிய ஒரு கட்டாயமான நிகழ்வு.
அதற்க்கு இடையில் மனிதனை கடவுளாக்கும் கேவலமான செயலை தடுத்து நிறுத்த முடியாவிடினும், குறைந்த பட்சம் ஒரு கண்டனத்தையாவது பதிவு செய்யவேண்டியது நமது கடமை..அதைத்தான் நான் செய்திருப்பதாக நினைக்கிறேன்..!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?