Pages

Thursday, November 10, 2011

நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு கடுங்கண்டனம்..!


இது ஒரு நண்பர் இமெயிலில் அனுப்பியது. இந்த செய்தி பற்றி நானும் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தபோது நண்பரின் இந்த  அவசியமான கட்டுரையும் என் என்னத்தை ஒத்துபோவதினால் காப்பி அண்ட் பேஸ்ட் பதிவாக...


TV editors slam Katju for irresponsible and negative comments

(பொறுப்பற்ற மற்றும் எதிர்மறையான கருத்துகள் சொன்னதற்காக தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கட்ஜுவை சாடினர்)
***************************

"The Editors Guild of India" has come out with a scathing condemnation of Press Council of India chairman Justice Markandey Katju

(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கு "எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா" கண்டனம்)
***************************

BEA (Broadcast Editors' Association) condemns Justice Katju's demeaning remarks against media
(ஊடகங்களுக்கு எதிராக நீதிபதி கட்ஜுவின் தரம்தாழ்த்தும் கருத்துக்களை 'ஒலிபரப்புஎடிட்டர்கள் சங்கம்' கண்டிக்கிறது)
***************************

Press association - a body of Press Correspondents accredited with Government of India (PIB) condemns Katju's statement about scribes

(கட்ஜு அறிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்)
***************************
 NBA (News Broadcasters Association) too defends media operations, condemns Katju's remarks
(செய்தி ஒலி/ஒளிபரப்பாளர்கள் சங்கம் கூட, ஊடக செயல்பாடுகளை பாதுகாக்கும் பொருட்டு கட்ஜு கருத்துக்கு கண்டனம்)
***************************
News bodies - Indian Newspaper Society (INS) condemn Katju’s comment
(செய்தி அமைப்பு மற்றும் தினசரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு ஆகியன கட்ஜுவின்கருத்துக்கு கண்டனம்)
***************************
இந்த ஊடகத்துறையினர் எல்லோரும் இப்படி ஒட்டுமொத்தமாக வாயிலும் வயிற்றிலும் 'லபோ திபோ' என்று அடித்து அலறிக்கொண்டு... எதற்கு இதுபோல காட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.மார்கண்டேய கட்ஜுவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்..? ஊடகத்தினர்  பற்றி அவர் அப்படி என்னதான் சொன்னார்..?

காரணம் இருக்கின்றது ..! "ஊடகம்" என்ற இந்த காட்டுப்பூனைக்கு,  இதுவரை சரியான ஒரு மணியை கட்ட முக்கிய உயர்ந்த அரசுப்பணியில் இருந்தவர்கள் எவரும் ஒரு சிறு முயற்சி எடுத்ததாகக்கூட தெரியவில்லை  ஆனால், இவரோ... செய்தியாளர் திரு.கரன் தாப்பர்க்கு சென்ற வாரம் அளித்த CNN-IBN  தன் பேட்டியில், பொதுவாக ஊடகங்களை சவுக்கை எடுத்து அடித்து விளாசி தோலை உரித்து தொங்கப்போட்டு இருக்கிறார், தன்னுடைய காட்டமான உண்மை வார்த்தைகள் மூலம்..!



விடுவார்களா ஊடகத்தினர்..? அதன் விளைவுதான் மேற்படி கண்டனங்கள்..! ஆனா, உண்மையில் இந்த ஊடகத்தினரின் கண்டனங்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியன.நீதிபதி கட்ஜுவின் கருத்துக்கள் போற்றப்பட வேண்டியன. அப்படி என்னதான் காரசாரம் இருந்தது அவரின் அந்த பேட்டியில் என அறிய விருப்பமா ..?

இதோ... நமக்காக தினகரன் நாளிதழ் அந்த பேட்டியின் மொழியாக்கத்தை இவ்வாரம் நவம்பர்-2 அன்று வெளியிட்டுள்ளனர். நீங்களும் இதை படித்துப்பாருங்கள் ..! அப்படி அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார் கண்டனம் தெரிவிப்பதற்கு..? --என்று விளங்கும்..!

நன்றி :-
தினகரன் நாளிதழ் (2 நவம்பர் 2011-திருச்சி) & தினகரன் இணையதளம்
=========================================================
பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.

அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:

செய்தியாளர் கரன் தாப்பர் :சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

செய்தியாளர் கரன் தாப்பர் :உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : நிச்சயமாக இல்லை.

செய்தியாளர் கரன் தாப்பர் :உண்மையாகவா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல  அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சிலநேரங்களில் மக்கள்  நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.

செய்தியாளர் கரன் தாப்பர் :உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின்  கடமை என்று அந்தசந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை  குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்தியாவில் அப்படி  நடக்கவில்லை என்கிறீர்களா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ்  பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

செய்தியாளர் கரன் தாப்பர் :அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று  மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை,வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல்,பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையைஉண்டாக்குகிறது.

செய்தியாளர் கரன் தாப்பர் :ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதைப்பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன்  சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்கவழியில்லை  என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.

செய்தியாளர் கரன் தாப்பர் :மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும்  இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள்வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில்  குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்  ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன்முஜாஹிதின்  கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்  ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம்  பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்ததுஎன்று  காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு  விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி  மறுநாள் பத்திரிகைகளிலும்  பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள்என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக  இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான்  உண்மை.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்திவெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : குண்டு வெடித்த சிறிது  நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும் போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்குமூன்றாவது  உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக  மாறுகிற கால கட்டத்தில் அந்த மக்களும் நாடும்முன்னேற்ற  பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற  விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள்.

அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கானஎண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!

செய்தியாளர் கரன் தாப்பர் :ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதை செய்யவில்லை என்கிறீர்கள்.தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது  ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் ச £தாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது.  மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாக தூண்டுகோலாக செயல்படும் புனிதமான பணி  மீடியாவுக்கு தரப்பட்டிருக்கிறது. அந்த பொறுப்பை அது செய்ய தவறினால் நாட்டை மக்களை கைவிட்டு விட்டதாகத்தானே அர்த்தம்?

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு :அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்துகொண்டு ‘இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி‘ என கதைஅளந்து கொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.

செய்தியாளர் கரன் தாப்பர் :‘செய்தியை சரியாக சொல்வதில்லை;உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்து கூறுகிறது; கருத்தையும்வார்த்தைகளையும் வெட்டி  ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’என்பது மீடியா பற்றிய  மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அதேதான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைபார்த்து, ‘எனக்கு பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாக செய்தி போடுகிறோம்‘ என்று  பேரம் பேசினார்கள். அதை பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது.‘நாம்தான் சம்பளம் கொடுக்கிறோமே,  செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?‘என்று முடிவு செய்து, ‘ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்‘ என்று டீல் போடுகிறார்கள். ஒரு பத்திரிகையில் ‘‘வேட்பாளர் ‘ஏ‘ அமோக வெற்றி பெறுவார்‘‘ என்ற செய்தி மேலே; ‘‘அவருக்கு டெபாசிட் போய்விடும், ‘பி‘தான் ஜெயிப்பார்‘‘ என்று கீழே முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.

செய்தியாளர் கரன் தாப்பர் :இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிசெய்தார்கள்...?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அதில் எந்த பலனும் ஏற்பட்டதாக தெரியவில்லையே. நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து ‘லேடி காகா வந்துவிட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகு சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?


நீதிபதி மார்கண்டேய கட்ஜு : அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

செய்தியாளர் கரன் தாப்பர் :அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : பத்திரிகைகளை மட்டும்தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டீவி சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லி திருந்தாதமீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது;லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.

செய்தியாளர் கரன் தாப்பர் :அது பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் என்பார்களே?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவர்கள். எந்த சுதந்திரமும்எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

செய்தியாளர் கரன் தாப்பர் :மீடியாவை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது போலிருக்கிறதே?

நீதிபதி மார்கண்டேய கட்ஜு : நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாகாரர்களும்  இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தைசொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத்தான் இருக்கிறார்கள். எகனாமிக்தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த  அறிவு இல்லாதவர்கள்.


திரு.மார்கண்டேய கட்ஜுவின், ஊடகங்கள் மீதான இவ்வளவு  சிறப்பான சரியான கருத்துக்கள் கொண்ட ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வெட்கித்தலை குனிந்து தங்கள் தவறுணர்ந்து வருந்தி திருந்தி சரியான பாதையில் அல்லவா பயணிக்கவேண்டும் இனி..? ஆனால், அதைவிடுத்து... எதற்கு ஊடகத்தினர் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள்..?

மீடியா என்றால் கொம்பு முளைத்தவர்களா..? மீடியாக்களுக்கு எந்த பயமும் கட்டுப்பாடும் பொறுப்புணர்ச்சியும் இல்லை. மக்களின் எதிர்கால வாழ்வு குறித்து மனசாட்சி உறுத்தல் இல்லை. தப்பு செய்தால் சட்டப்படி தண்டனை நிச்சயம் என்ற அச்சம் இல்லை.

வெறும் TRP Ratting-ம் பத்திரிக்கை விற்பனையும், இணைய வாசகர்கள் ஹிட்சும் அதனடிப்படையிலான விளம்பர வருவாயுமே இவர்களின் குறிக்கோளாகி விட்டது.

ஊடகங்கள் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லவே..? ஒரு இந்திய குடிமகன்... அதுவும், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்... அதுவும், பிரஸ் கவுன்சில் தலைவர்...  ஊடகத்தை விமர்சித்ததால்... அவருக்கு கண்டனம் என்றால்..?!? அதுவும் எப்படி..? நாட்டுக்கும் மக்களுக்கும் சரியான நல்ல கருத்து சொன்னதுக்கு கண்டனம் என்றால்..?  என்னால் சும்மா இருக்க முடியவில்லை சகோ..!

இந்த பேட்டிக்காக நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகத்தாருக்கு எனது வன்மையான கடும் கண்டனம் உரித்தாகட்டும்..!

சபாஷ் கட்ஜு சார்..! நேர்மையான துணிச்சலான அருமையான பேட்டி..! முன்னாள் நீதிபதி மற்றும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

3 comments :

Peter John said...

real judje. he judged the indian media in right vision. thanks for ginvng this in tamil

குகன் said...

நல்ல பதிவு. அருமையான மொழியாக்கம்.

இங்கு எல்லோரும் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டதாகவே இருக்க விரும்புகின்றனர். குறிப்பாக ஊடகத்தினர். உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் 26/11 துயர நிகழ்வை தீவிரவாதிகளுக்கு லைவ் ரிலே போட்டு இராணுவ நடவடிக்கைகளை காட்டியது சொல்ல வேண்டும்

Barari said...

உண்மை சுடும்.அதற்குத்தான் இப்ப்டி மீடியகாரர்கள் ஓலமிடுகிறார்கள்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?