Pages

Wednesday, March 16, 2011

மாஞ்சாக் கொலைகள்

இந்த பயனுள்ள பதிவு "தமிழ்ச்சரம்"  என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டது. அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறேன்

வானத்தில் பட்டம் ஏற்றி விளையாடுவது என்பது நம்மில் பலருக்கு பரவசம் தரும் அனுபவம் ஆகும். சிறிய வயதில் காற்றாடி விடுவது என்பதே தொழில் என தெருவில் சுற்றித் திரிந்தது உண்டு. சென்னையின் வெயில் கால்களை சுட்டெரித்தாலும், புளியமர நிழலில் அமர்ந்து பட்டம் விடுவதற்க்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்திருப்போம். மாலை வேளை கொஞ்சம் சூரியன் தனது வெப்பத்தை இழக்கத் தொடங்கும் போது மைதானங்களை தேடிப் போய் வானத்தில் அவரவர் பட்டம் ஏற்றுவதும், அடுத்த ஏரியா பசங்களின் பட்டத்தை அறுக்க பெரும் போர் நடத்துவதும், அறுந்த பட்டத்தை முதலில் கைப்பற்றுபவனுக்கே சொந்தம் என்பதால், சீதையை கைப்பற்ற போன இராவணன் கணக்காக ஓடிப் போய் பிடிப்பதும் பால்ய கால நினைவுகளாகி விட்டது. ஆனால் அப்போது பட்டத்தின் நூலுக்கு மாஞ்சா போடுவது என்பது போர்களத்துக்கு போகும் வீரர்கள் ஆயுதங்களை புதுப்பித்தல் போல படுஜோராக நடக்கும். ஆரம்ப கால மாஞ்சாக்கள் என்பது இயல்பான பொருட்களின் கலவையாக இருந்தன.



ஆனால் காலம் செல்ல செல்ல பட்டம் என்பது ஒரு வியாபார மயமாக்கப் பட்டது. அதனால் மாஞ்சா கலவையில் ரப்பர், கண்ணாடித் துகள்கள் என பலவற்றை சேர்க்கத் தொடங்கினர். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது எனத் தெரியாது, ஆனால் அனைவரிடமும் இதுத் தொற்றிக் கொண்டது. கண்ணாடித் துகள்கள் சேர்க்கப் பட்ட மாஞ்சா நூலானது மிகவும் ஆபத்தானது அது கைகளை அறுத்துவிடும். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் பட்டம் விடும் வயதைக் கடந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் மாஞ்சாவும், பட்டமும் இன்றளவும் தொடர்கிறது.


சென்னை நகரம் மரங்களையும், மைதானங்களையும் இழக்கத் தொடங்கியது. எங்கெங்கும் வீடுகள் பெருகின, புதிய மக்கள் குடியேறினார்கள். ஆனாலும் பட்டமும், மாஞ்சாவும் அழியவில்லை. கண்ணாடி துகள் கலந்த மாஞ்சா விற்கும் இடங்கள் சென்னையின் மையப்பகுதிகளில் இருந்தன. அவை சூடான வியாபாரத்தை நடத்தி வந்தன. பட்டம் விடுவதால் பல வேளைகளில் அந்த நூல் அறுந்து மரக் கிளைகளிலும், போஸ்ட் கம்பங்களிலும் சிக்கிக் கிடக்கும். கல்லூரிகளுக்கு செல்லும் காலத்தில் அந்த மாஞ்சா நூல்களில் சிக்கி சில குருவிகள் செத்துக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். அந்த நூல்களின் ஆபத்து அப்போது தான் புரிந்தது. அவை பெரும்பாலும் எளிதில் மக்காது. மக்கள் நெருங்கிய இடங்களில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானதும் கூட. இதனைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்பட்டதே கிடையாது.


இப்படியான மாஞ்சா நூல் காற்றாடிகள் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தையின் உயிரை வாங்கியதாக எனது நண்பர் மூலம் அறிந்துக் கொண்டேன். அதன் பின் சென்னை மாநகருக்குள் மாஞ்சா காற்றாடிகள் தடைசெய்யப்பட்டு விட்டது. ஆனால் அத்தடை ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

செரினா பானுவின் மரணம்:


இந்நிலையில் நேற்று சென்னை மெரினாக் கடற்கரையில் விளையாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் நான்கரை வயது சிறுமி செரினா பானுவின் கழுத்தில் எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு பாம்பினைப் போல சுற்றிக் கொண்டது. அதனை சில சிறுவர்கள் இழுக்கவும், அது அவளின் தொண்டைப் பகுதியை மேலும் இறுக்கியது. அப்பா என அலறியப் படி மயங்கி விழுந்தாள் செரினா பானு. இந்தச் சம்பவம் புதுப்பேட்டையில் உள்ள ஆதித்தனார் சாலையில் மாலை 5.30 மணிக்கு நடந்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர் அவளின் பெற்றோர் ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் முதலுதவிக் கூட செய்யாமல் அவளை அங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் அருகில் இருக்கும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் செல்லும்வழியிலேயே அச்சிறுமி இறந்துவிட்டாள்.


பெற்ற பிள்ளையின் இறப்பைத் தாங்கி கொள்ள முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் பாத்திமா என சோகம் ததும்பிய கண்களோடு கூறினார் முகமத். இச்சம்பவம் புதுப்பேட்டை பகுதி வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னர் உள்ளூரில் உள்ள அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மாஞ்சா தடை செய்யப்பட்ட போதும், அத்தடையை நடைமுறைப்படுத்திய காவலரையும் மக்கள் வன்மையாக கண்டித்தனர். ஆனால் இனிமேல் செரினா பானுவின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இன்னொரு செரினா பானுவின் உயிரை இந்த மாஞ்சா குடிக்கும் முன் நாம் என்ன செய்யப் போகின்றோம் ?


மாஞ்சா என்றால் என்ன?

மாஞ்சா என்பது கண்ணாடித் துகள்கள், மைதாமாவு போன்றவற்றை சேர்த்து செய்யும் ஒரு கலவை. பெரும்பாலும் இது கொதிக்கவைத்து கலக்கப்பட்டு பின்னர் பட்டம் விடும் நூல்களின் மீது பூசுவார்கள். இந்த மாஞ்சாவானது கைகளை அறுத்துவிடும் அபாயம் கொண்டவை. இது பறவைகள், மனிதர்கள், விலங்குகளுக்கு பலவகையில் எமனாக முடிந்துவிடுவது உண்டு. இந்த மாஞ்சாவானது வடநாட்டில் உருவாக்கம் பெற்ற தெற்காசியா முழுதும் பயன்பட்டு வருகிறது. ஆரம்பக் காலங்களில் மாஞ்சாவனது அரிசிமாவிலும், மரப்பட்டை சேர்த்து செய்யப்பட்டு வந்த்து, பின்னர் அதில் கண்ணாடி, ரப்பர், கெமிக்கல் பொருட்களை சேர்க்க ஆரம்பித்து விட்டனர். இதில் கலக்கப்படும் வஜ்ரம் என்னும் பொருள் போதை வஸ்துவாகவும் பயன்படுகிறது என்பது அதிர்ச்சித் தகவல்

சென்னையில் மாஞ்சா தடைசெய்யப்பட்டுள்ளதா?

கடந்த 2006ம் ஆண்டு எட்டு வயது சிறுவன் மாஞ்சா காத்தாடி நூலில் சிக்கி உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து சென்னைக் காவல்துறை சட்டம் பிரிவு 71-யின் கீழ் பொது இடத்தில் காற்றாடிப் பறக்க விடுவதும், மாஞ்சா விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், வியாபாரமும் குறைந்தபாடில்லை. கடந்த சனவரி முதல் குறைந்தது ஐந்து பேர் வரை மாஞ்சா நூலால காயமடைந்துள்ளனர்.


மாஞ்சாவை தடை செய்தாலும் மாஞ்சாவை வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்து சென்னையின் மத்தியப் பகுதிகளில் பல கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதே போல பல சிறுவர்கள் மாஞ்சாவை வாங்குவதை விடவும் தாமே தயார் செய்தும் விடுகின்றனர்.

பிரச்சனை :

பட்டம் விடுதல் நம் நாட்டில் காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். பட்டம் விடுதல் சிறுவர்களுக்கு முக்கியமானதொரு பொழுதுபோக்கு.


சென்னை நகரமயமாக்கலில் விளையாட்டு மைதானங்களை உருவாக்காமல் விட்டது பெரும் தவறு. சிறுவர்களுக்கான பொழுதுபோக்கில் அக்கறையில்லாமல் விட்டதும், பலவகைப்பட்ட விளையாட்டுகளை அறிமுகம் செய்யாமல் விட்டதும், விளையாட்டுக் கழகங்கள் ஒவ்வொரு பகுதியிலும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.

பட்டம் வியாபாரம் செய்பவர்கள் கொடிய கண்ணாடித் துகள்கள் கலந்த மாஞ்சாவை விற்பனை செய்தது. மாஞ்சா விற்பனை என்பது பல லட்சம் புரளும் ஒரு வியாபாரம் அதனை நடத்துவோர் முக்கியப் புள்ளிகள் என்பதால் அவற்றைத் தடை செய்யாமல் விட்டது. அலல்து தடை இருந்தும் தடை அமுலாக்கம் செய்யாமல் இருப்பது.

மாஞ்சா குறித்து போதிய பகுத்தறிவு பொதுமக்களிடம் இல்லாமல் இருப்பது. எந்த இடத்தில் எப்படியான விளையாட்டு விளையாட வேண்டும் என பிள்ளைகளை வளர்க்கத் தெரியாத பெற்றோர்கள் ஒரு காரணம்.

இப்படியான விபத்துகள் ஏற்படும் போது உடனடி முதலுதவி செய்யத் தெரியாத மருத்துவமனைகள், மருத்துவர்கள். அவசர சிகிச்சை உடனடியாக அனைவருக்கும் கிடைக்கும் வசதி இல்லாமை. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு நிற்கும் அவலம்.

தீர்வுகள் :

மாஞ்சா நூல் மட்டுமில்லாமல் பட்டம் விடுதலை முற்றிலுமாக அரசால் தடைச் செய்யப்படல். தடையை அமலாக்கம் செய்யாது இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை.

தெருவில் செல்லும் போது காணப்படும் மாஞ்சா நூலை கண்டும் காணமலும் போகாமல், இந்த கயிறு நாளைக்கு நம் வீட்டு பிள்ளைக்கும் உயிராபத்து ஏற்படுத்தும் என்று எண்ணி அதனை உடனடியாக உள்ளூர் காவலில் முறையிடுதல்.

மாஞ்சா நூல் விற்கும் இடங்களைக் கண்டுபிடித்து அதனைத் தடுக்க மக்கள் நேரிடையாக ஒரு குழு அமைத்தல். ஒவ்வொரு பகுதியிலும் சிறுவர்கள் விளையாட போதிய மைதானங்கள் அமைத்தல். மாற்று விளையாட்டுகளை பயிற்றுவித்தல்.

பட்டம் விட செல்லும் உங்களது பிள்ளைகளுக்கு, இது போன்ற சம்பவங்களை எடுத்துக் கூறி அறிவுரைச் செய்தல். நெருக்காமன குடியிருப்புப் பகுதியில் முற்றிலுமாக பட்டம் விடுவதைத் தடைச் செய்தல். வேற்று மாநிலத்தில் இருந்து வியாபார நிமித்தம் பட்டம் விற்பனையை முற்றிலுமாக தடைச் செய்தல்.

இந்த செரினா பானுவின் மரணத்துக்கு சிறுவர்களும், காவலரின் கவனக்குறைவும், மாஞ்சா பட்டம் விற்பவரும், ஒழுங்கற்ற மருத்துவரும் மட்டும் காரணம் அல்ல. மாஞ்சா குறித்து ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தவறிய நாம் அனைவருமே இதற்கு பொறுப்பாவோம்.

                                                                                 எழுத்து: தங்கபாண்டியன், சென்னை

                                                                                                    நன்றி   : தமிழ்ச்சரம்.காம்

6 comments :

சக்தி கல்வி மையம் said...

இது கண்டிக்கத்தக்கது..

Anonymous said...

இதை தடை செய்ய வேண்டும்

Unknown said...

pattamviduvathya thadaisiyavendum!

அலைகள் said...

munbu pattam viduvathendral manathu kuthukulikum ipothuninaithal payanthan varuhirathu

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல கருத்தை சொன்னா யாரு கேட்கிறா?


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட

திரு வேதாந்தங்கள் கருன்

திரு ஆர் கே சதீஷ்குமார்

திரு oneislam

திரு thameem

திரு தமிழ்வாசி

மற்றும் பார்த்துசென்ற அனைவருக்கும் நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?