Pages

Wednesday, March 31, 2010

அழிந்து வரும் சிட்டுக் குருவி இனம்..

பறவை இனங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், அதில் சிட்டுக்குருவி இனம் மட்டும் மனிதர்களை சார்ந்து வாழக்கூடியது. அதனால்தான், அதை அடைக்கல குருவி என்று அழைக்கிறார்கள். மனிதர்களின் அடைக்கலத்தில்தான் அவை வாழும்.

மற்ற பறவைகள் எல்லாம் காடுகளிலும், மரங்களிலும் கூடு கட்டி வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக் குருவி வீடுகளில் உள்ள பொந்துகளிலும், உத்திரத்தின் மேலும், போட்டோக்களுக்கு பின்புறமும் கூடுகளை அமைத்துக்கொண்டு, மனிதர்கள் உட்கொள்ளும் தானியங்களை உண்டு வாழும்.

அதனால் இந்த சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிகளுக்கு யாரும் தொந்தரவு கொடுக்க நினைக்க மாட்டார்கள். கிராமங்களில் உள்ள வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தால், கூட்டைக் கலைக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால், சிட்டுக் குருவியை வீட்டைவிட்டு விரட்டினால், தனது குடும்பமும் பிரிந்துவிடும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

அதனால்தான், கிராமங்களில் எந்ததவித தொந்தரவும் இல்லாமல், "கீச்..கீச்.." என்ற மெல்லிய சத்தத்துடன் துருதுரு என்று சிட்டுக் குருவிகள் பறந்து திரியும். சுறுசுறுப்புக்கு கூட கிராமத்தில் சிட்டுக்குருவியைத்தான் இன்னும் உதாரணமாக சொல்வார்கள்.

சிட்டுக்குருவியை வைத்து சினிமாக்களில் கூட பாட்டுக்கள் எழுதுகிறார்கள்..."சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு...", சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..", "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..", .. " ஏ குருவி..சிட்டுக் குருவி.." என்று எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்..

ஆனால், இந்த சிட்டுக் குருவிக்கு செல்போன் கோபுரம் என்ற எமன் வடிவில் ஆபத்து வந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சு, சிட்டுக் குருவியின் இதயத்தை தாக்குகிறது. இதனால், சிட்டுக் குருவி சுருண்டு விழுந்து சாகிறது...செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது.

ஒருகாலத்தில் கிராமம், நகரம் என்று எங்கு பார்த்தாலும் சிட்டுக் குருவியைப் பார்க்கலாம். ஆனால், தற்போது நகரங்களில் சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. சென்னை நகரில் சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மைனா உட்பட ஒரு சில பறவைகளைத்தான் காண முடிகிறது.

மேலும், சிட்டுக்குருவிகளுக்கு கூடுகட்ட தேவையான இடங்கள் தற்போது இல்லை. ஏனென்றால், கூரை வீடுகள் எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. விவசாய பயிர்களுக்கு நாம் தெளிக்கும் மருந்துகளும் சிட்டுக் குருவி அழிவுக்கு ஒரு காரணம் ஆகும்.

இதே நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் குழந்தைகளுக்கு சிட்டுக் குருவிகளை படங்களில் மட்டும்தான் காட்டமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பறவை ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும், கோரிக்கைவைத்துள்ளனர்.

தினத்தந்தியில் வந்த ஒரு கட்டுரை...நமது பதிவர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்..

இந்த கட்டுரையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெரியும்..ஏனென்றால் இதன் காரணமாக நாம் செல்போன் பேசுவதை நிறுத்திவிடபோகிறோமா? அல்லது சிட்டுக்குருவிகளுக்கு கூடுதான் கட்டிதரப் போகிறோமா...

ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க மறுக்கும் பணகாரவர்கத்தினர் , தங்களது நாய் செத்துவிட்டால் "obituary" காலத்தில் விளம்பரம் கொடுத்து அழுவார்கள்..அவர்களுக்கு இந்த பரிதாபத்திற்குரிய  சின்னஞ்சிறிய பறவைகள் எல்லாம் ஒரு பொருட்டா?

2 comments :

மங்குனி அமைச்சர் said...

//இந்த கட்டுரையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று தெரியும்..ஏனென்றால் இதன் காரணமாக நாம் செல்போன் பேசுவதை நிறுத்திவிடபோகிறோமா? அல்லது சிட்டுக்குருவிகளுக்கு கூடுதான் கட்டிதரப் போகிறோமா...//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடுசுருக்கு

Alexander said...

பாவம் தான். இன்னும் நாம் எத்தனை உயிரினங்களை அழித்துவிடப் போகிறோமோ தெரியவில்லை. ஏதோ நம்மால் முடிந்த விஷயங்களைச் செய்யலாம்.

இது கோடை காலமாதலால் பறவைகளுக்கு அரிசியும், குடிக்க தண்ணீரும் நம் வீட்டு முற்றத்தில் வைத்து அவைகளுக்கு உதவலாம்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?